பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு கண்டனம்: சேலத்தில் மாணவர்கள், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சேலத்தில் நேற்று மாணவர்கள், வக்கீல்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

Update: 2019-03-15 23:00 GMT
சேலம்,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்தும் இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலத்தில் நேற்று மாணவர்கள், வக்கீல்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச்சென்று அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி மற்றும் சில தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு திரண்டனர். அங்கிருந்து அவர்கள் செரி ரோடு, முள்ளுவாடி கேட் வழியாக ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் திடீரென்று கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இதைபார்த்த போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. எனவே மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் மறியல் முயற்சியை கைவிட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பொள்ளாச்சியில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்து விட்டு காலதாமதப்படுத்தாமல் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடித்து அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகளின் இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதே போன்று பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் நேற்று மதியம் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமையை கண்டித்து நேற்று மதியம் சேலம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வக்கீல் பொன்னுசாமி தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என்று கூறினர்.

இதேபோன்று பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்