காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு நூதன தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு நூதன தண்டனையை பெங்களூரு கோர்ட்டு விதித்து உத்தரவிட்டது.

Update: 2019-03-15 21:30 GMT
பெங்களூரு,

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கூலிகட்டி சேகர். இவர், ஒருவருக்கு ரூ.25 கோடிக்கு காசோலை கொடுத்தார். அந்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் சார்பில், கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ. மீது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

பிடிவாரண்டு ரத்து

இந்த நிலையில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு கோரினார். அப்போது, எம்.எல்.ஏ.வை சிறிது நேரம் அமரும்படி கூற வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ.வை போலீசார் சிறிது நேரம் கோர்ட்டில் அமர வைத்தனர். அதன் பிறகு அபராதமாக ரூ.100 செலுத்தும்படி நீதிபதி, கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ.வுக்கு உத்தரவிட்டார். அதன்படி ரூ.100-ஐ செலுத்திவிட்டு கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்