பெங்களூருவில், காரில் அழைத்து சென்று பெண் ராணுவ அதிகாரி கற்பழிப்பு போலீஸ் விசாரணை

பெங்களூருவில் காரில் அழைத்து சென்று பெண் ராணுவ அதிகாரியை கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-03-15 21:43 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், விவேக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து ராணுவ உயர் அதிகாரிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அமித்சவுத்திரி என்பவரும் கலந்து கொண்டார். அவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் ஓட்டலில் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது தன்னுடன் பணிபுரியும் 29 வயது பெண் ராணுவ அதிகாரியை அமித்சவுத்திரி நாம் இருவரும் காரில் எங்காவது வெகுதூரம் சென்று வரலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் ராணுவ அதிகாரியும் சம்மதித்துள்ளார்.

கற்பழிப்பு

அப்போது அமித்சவுத்திரி காரை பழைய விமான நிலைய சாலையில் ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து காரை நிறுத்திய அமித்சவுத்திரி, பெண் ராணுவ அதிகாரியை கற்பழித்துள்ளார். பின்னர் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அவர் பெண் ராணுவ அதிகாரியை மிரட்டியுள்ளார்.

இதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரது பெற்றோர் அந்த பெண் ராணுவ அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழுதுள்ளார். அதையடுத்து அவரது பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

போலீசில் புகார்

இந்த சம்பவம் கடந்த மாதம்(பிப்ரவரி) 4-ந்தேதி நடந்தது. மேலும் நடந்த சம்பவம் பற்றி பெண் அதிகாரி ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி இதுபற்றி விவேக் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் சம்பவம் நடந்த இடம் பழைய விமான நிலைய சாலை என்பதால், இவ்வழக்கு அல்சூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பேரில் அல்சூர் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்