குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வரும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செயலாளர் உள்பட 2 பேர் கைது; திடுக்கிடும் தகவல்கள்

குந்தாப்புராவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வரும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காப்பகத்தின் செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-03-15 23:00 GMT
மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கேடூர் பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு உடுப்பி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் பெற்றோரை இழந்து வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் கேசவா கோட்டேஷ்வர் என்பவர் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் மங்களூரு அருகே குப்பேபதவு பகுதியை சேர்ந்த தம்பதி, ஒரு குழந்தையை தத்தெடுக்க அந்த குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோர்ட்டு விதிமுறைப்படி 10 வயது சிறுமியை தத்தெடுத்து தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது வீட்டில் வைத்து அந்த சிறுமி ரத்த வாந்தி எடுத்துள்ளாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், மருத்துவமனையில் அவளை அனுமதித்தனர். பின்னர் அந்த தம்பதி, சிறுமியை காப்பகத்தில் கொண்டு விட்டுவிட்டு சென்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்

ஆனால் காப்பகத்தில் இருந்து அந்த சிறுமி கோட்டா போலீஸ் நிலையத்துக்கு சென்றாள். தன்னை தத்தெடுத்தவர்களிடம் சேர்க்குமாறு அவள் தெரிவித்தாள். இதையடுத்து போலீசார் அவளை குழந்தைகள் காப்பகத்துக்கு செல்லும்படி கூறினர். ஆனால் அவள், குழந்தைகள் காப்பகத்துக்கு செல்ல மறுத்துவிட்டாள். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர்.

குழந்தைகள் காப்பகத்தில் உதவியாளராக இருக்கும் ஹனுமந்தப்பா என்பவர், காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அவர்களை பலாத்காரம் செய்து வருவதாகவும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தாள். இதையடுத்து போலீசார் குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அங்கிருந்த ஹனுமந்தப்பாவை பிடித்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

5 சிறுமிகள் பலாத்காரம்

குந்தாப்புரா அருகே கேடூர் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உள்பட ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறர்கள். அங்கு உதவியாளராக இருக்கும் ஹனுமந்தப்பா சிறுமிகளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஒரு சில சிறுமிகளையும் அவர் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதில் காப்பகத்தின் செயலாளராக உள்ள கேசவாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த காப்பகத்தில் உள்ள 5 சிறுமிகளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமிகளுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும் கேசவாவுக்கு தெரிந்த சில இளைஞர்களும் காப்பகத்துக்கு சென்று ஆதரவற்ற சிறுமிகளிடம் தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொண்டுள்ளனர். கேசவாவும், ஹனுமந்தப்பாவும் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து கோட்டா போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தின் செயலாளர் கேசவா மற்றும் உதவியாளர் ஹனுமந்தப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். குழந்தைகள் காப்பகம் நடத்தி சிறுமிகளை 2 பேர் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து போலீசார், வேறு சிறுமிகள் யாரும் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்