பொள்ளாச்சி பாலியல் சம்பவம், குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி - ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-15 23:30 GMT
ஈரோடு, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தி.மு.க. மற்றும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.இந்த நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பினார்கள். இதற்கிடையே ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் சாலைமறியலுக்கு முயன்றனர்.

அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பின்னர் வீரமணி தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி வீசினர். மேலும் அவரது உடலில் தண்ணீரையும் ஊற்றினார்கள்.

அப்போது அவர், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார். இதைத்தொடர்ந்து போலீசார் வீரமணியை கைது செய்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஈரோடு பகுதியை சேர்ந்த என்ஜீனியரிங் பட்டதாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளையும் வைத்திருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அந்த இளைஞர்களிடம், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இங்கு கோஷங்கள் போடக்கூடாது. மீறி கோஷமிட்டால் கைது செய்யப்படுவீர்கள்’ என்று எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை அங்கு வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்