கும்பகோணம் அருகே, மின்வாரிய என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை

கும்பகோணம் அருகே மின்வாரிய என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-15 22:45 GMT
திருவிடைமருதூர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை ராஜமீனா நகரை சேர்ந்தவர் தொல்காப்பியன்(வயது 55). இவர் பட்டுக்கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி(49). இவர் பருத்திச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது மகளை சென்னையில் தனிக்குடித்தனம் வைப்பதற்காக கடந்த 8-ந் தேதி தொல்காப்பியனும், சுகந்தியும் சென்னைக்கு சென்றனர்.

பின்னர் தொல்காப்பியன் கடந்த 12-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு பணிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்து விட்டார்.சுகந்தி நேற்று முன்தினம் இரவு ரெயிலில் புறப்பட்டு நேற்று அதிகாலை கும்பகோணம் வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டும், பீரோக்கள் உடைக்கப்பட்டும் கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இது குறித்து நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இருவரும் வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.மின்வாரிய என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்