நடிகை ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் “ஓட்டுப்போட வராத நீங்கள் அறிவுரை கூற வேண்டாம்”

நெட்டிசன்கள் பலரும் நடிகை ரம்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-15 23:00 GMT
பெங்களூரு, 

கன்னடத்திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் கடந்த 2012-ம் ஆண்டு இளைஞர் காங்கிரசில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார்.

இதில் அவர் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆனார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில், ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் சி.எஸ்.புட்டராஜுவிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதன் பின்னர் அவர் மண்டியா தொகுதி அரசியலில் ஆர்வம்காட்டாமல் இருந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மண்டியா சட்டசபை தேர்தல், மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தல், மண்டியா நகரசபை தேர்தல் ஆகிய தேர்தல்களில் நடிகை ரம்யா ஓட்டுப்போட கூட அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நடிகை ரம்யா தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில் வாக்களிக்க தகுதியுள்ள இளைஞர்களே அனைவரும் வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ரம்யா... அவர்களே அறிவுரை கூறுவதற்கு முன்பு நீங்கள் முதலில் வாக்களியுங்கள். ஓட்டுப்போடாமல் நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறவேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது டுவிட்டரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்