பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-15 22:59 GMT
பெரம்பலூர்,

கோவை மாவட்டம். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களிடம் முகநூல் (பேஸ் புக்) மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் மீதான இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகிறது. அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் நேற்று மாலை 3 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மீரான்மொய்தீன் தலைமை தாங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஷரீப் கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதே போல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். இதில் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்