குறிஞ்சிப்பாடியில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வை சரியாக எழுதாததால் விபரீத முடிவு

குறிஞ்சிப்பாடியில் தேர்வை சரியாக எழுதாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-15 23:00 GMT
குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி வைத்திலிங்கபுரம் சரஸ்வதிநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி உமாசங்கரி. இவர்களுக்கு சச்சின் என்கிற பிரவீன்(வயது 15) என்ற மகன் இருந்தான். சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், உமாசங்கரி தனது மகனுடன் வசித்து வருகிறார். பிரவீன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். உமாசங்கரி, தனது வீட்டின் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை பிரவீனும் எழுதினார். ஆனால் அவர் தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் அவர் தேர்வு முடிந்த பின்னர் யாரிடமும் பேசாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது தாய் உமாசங்கரி கதறி அழுதார்.

இதுபற்றி அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிரவீனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வை சரியாக எழுதாததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்