செம்பட்டி அருகே, தொழிலாளியிடம் ரூ.1,500 பறித்த வாலிபர்கள் - போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்

செம்பட்டி அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500 பறித்த 2 வாலிபர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

Update: 2019-03-15 22:45 GMT
செம்பட்டி,

செம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் செம்பட்டி-பழனி சாலையில் வாரச்சந்தை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி மிரட்டி ரூ.1500-யை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா கூச்சல் போட்டார். அந்த வேளையில் பழைய செம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்தனர். இதையடுத்து போலீசாரை பார்த்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு கையில் கத்தியுடன் ஓட்டம் பிடித்தனர். இருந்தபோதிலும் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

இதனை பார்த்த பொதுமக்களும், இளைஞர்களும் போலீசாருடன் சேர்ந்து அவர்களை விரட்டினர். சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு விரட்டி சென்ற போலீசார் மற்றும் இளைஞர்கள் செம்பட்டி மூவேந்தர் நகரில் வைத்து அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

விசாரணையில் அவர்கள் பழனியை சேர்ந்த சக்தீஸ்வரன் (28), மதுரையை சேர்ந்த சிதம்பரசன் (34) என்பது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளும் திருட்டு வாகனம் என்பது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சக்தீஸ்வரன் மற்றும் சிதம்பரசன் மீது திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்