சுதந்திரம், கல்வி, சமஉரிமை கிடைத்தால் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள் இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குனர் பேச்சு

சுதந்திரம், கல்வி, சமஉரிமை கிடைத்தால் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள் என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் பத்மஜாசுந்துரு தெரிவித்தார்.

Update: 2019-03-15 21:30 GMT
காட்பாடி, 

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் 13 அடுக்குமாடிகள் கொண்ட புதிய விடுதி கட்டிடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிலும், ரூ.51 கோடி மதிப்பீட்டில் 5 மாடிகளை கொண்ட புதிய அகடமிக் கட்டிடம் மகாத்மா காந்தி பெயரிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரு புதிய கட்டிடங்களின் திறப்பு விழா மற்றும் சர்வதேச மகளிர் தினவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் பத்மஜாசுந்துரு கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் சென்னா ரெட்டி அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் பத்மஜாசுந்துரு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியன் வங்கி அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு நிறுவனமாகும். வங்கியில் உள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 33 சதவீதம் பேர் பெண்களாகவே உள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் பணியில் உள்ளனர். இதன் மூலம் சமுதாயத்தின் பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. பெண்களுக்கு சுதந்திரம், கல்வி மற்றும் சமஉரிமை கிடைக்க வேண்டும். அதன்மூலம் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள். வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 60 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இவர்கள் சிறு வணிக நிதி பெற்று சுய உதவிக்குழு மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். குடும்ப வாழ்க்கையானாலும் சேவை பணியில் இருந்தாலும் பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்க வேண்டும். அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்.

பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை நல்வழிபடுத்துவதன்மூலம் நீங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து விழாக்களுக்கு தலைமை தாங்கிய வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

சேமிக்கும் பழக்கத்தில் பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 49 சதவீதம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது இந்தியாவில் அந்த நிலை ஏற்படவில்லை. அதற்கு காரணம் நமது நாட்டில் பெண்களால் ஏற்பட்ட சேமிப்பு பழக்கம் ஆகும். நாட்டில் பெண்களுக்கு சம அதிகாரம் வழங்குதல் என்பது பேச்சு வழக்கிலேயே உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 முதல் 8 சதவீதமும், நாடாளுமன்றத்தில் 12 சதவீதமும், ராஜ்யசபாவில் 11 சதவீதமும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பதவியில் 10 சதவீதமும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியில் 15 சதவீதமும் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் இதே நிலைதான் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான சட்டம் 1996-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை அந்த சட்டம் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்படாமல் உள்ளது. பல்வேறு முக்கிய கட்சிகள் பேசி வந்தாலும் அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவுரவ விருந்தினராக வி.ஐ.டி. முன்னாள் மாணவியும் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவருமான ஜி.முத்தழகி கலந்துகொண்டு பேசினார். இதில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியாபென்டரெட்டி, துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், மாணவர் நலன் இயக்குனர் அமித்மகேந்திரக்கர், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவி ரக்‌ஷன்யாசேகர் வரவேற்றார். முடிவில் மாணவி சோனல்சிங் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்