வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2019-03-15 23:11 GMT
புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்டல அலுவலர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,537 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 136 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்டமன்ற தொகுதிகளான கந்தர்வக்கோட்டை (தனி) 20 மண்டலமும், விராலிமலை 21 மண்டலமும், புதுக்கோட்டையில் 24 மண்டலமும், திருமயத்தில் 23 மண்டலமும், ஆலங்குடியில் 21 மண்டலமும், அறந்தாங்கியில் 27 மண்டலமும் அடங்கி உள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் தேர்தல் பணிக்காக ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வாகனம் ஒன்று ஒதுக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்வசதி, குடிநீர், சாய்தளம், கழிவறை வசதி மற்றும் மின்சாரம் இல்லாத நேரங்களில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அத்துடன் வாக்குப்பதிவின் போது தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறிகள், குழல் விளக்குகள், அதற்கான மின் இணைப்புகள், தொலைபேசி இணைப்பு வசதி, செல்போன் வசதி போன்ற அடிப்படை வசதிகள் வாக்குச்சாவடியில் உள்ளனவா? என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லாத வாக்குச்சாவடிகளின் விவரங்களை உடனே சேகரித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பற்றி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வழித்தடங்கள் குறித்த வரைபடங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும். அவ்வழித்தடங்களில் சென்று பார்வையிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-12 சேகரிக்க வேண்டும். அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை வாக்காளர்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தவும், வாக்குச்சாவடிகளின் அமைவிடத்தில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் எல்லைக்கோடு, வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.

இதுதவிர அரசியல் கட்சி அலுவலகங்கள் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் அமைக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச்சாவடிகளில், தேர்தல் நடத்த தேவையான அனைத்து பொருட்களுடன் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் பாதுகாப்பாக சென்றடைந்ததை உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, தனி தாசில்தார் (தேர்தல்) திருமலை மற்றும் தேர்தல் தொடர்புடைய அரசு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்