ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றதாக கைதான இலங்கை அகதிகள் உள்பட 19 பேர் விடுதலை கோர்ட்டு தீர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றதாக கைதான இலங்கை அகதிகள் உள்பட 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2019-03-16 22:15 GMT
அழகியமண்டபம்,

மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோக குமார் (வயது 41), வேலூர் மாவட்டம் மேல்மானா முகாமை சேர்ந்த பாஸ்கரன், இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த கோபிநாத், அவரது மனைவி ஷோபனா உள்பட 19 பேர் கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2016–ம் ஆண்டு ஜூன் மாதம் 27–ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் தப்பி செல்ல முயன்றதாக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல், வேலூர், திருச்சி உள்பட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முதலில் பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிகட்டமாக இரணியல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட 19 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி செல்வ நாயகி கண்ணன், குற்றஞ்சாட்டப்பட்ட 19 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு கூறினார். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்