திருவாரூர் மாவட்டத்தில் 100 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 100 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2019-03-16 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களை கண்காணிக்கும் விதமாக ஊடக மையம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு டி.வி.க்களில் வரும் விளம்பரங்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு 25 மண்டல அலுவலர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு 25 மண்டல அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு 23 மண்டல அலுவலர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு 27 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல அளவிலான அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குசாவடியை பார்வையிட்டு குடிநீர், கழிவறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

தேர்தலில் மண்டல அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரின் பங்கு மிக முக்கியமானது. வாக்குசாவடி அருகில் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களை சார்ந்த எந்தவொரு விளம்பர தட்டிகளும் வைக்க கூடாது. வாக்குசாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் முறையாக எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உமா மகேஸ்வரி, தேசிய தகவல் மையம் தொழில்நுட்ப இயக்குனர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்