உத்திரமேரூர் அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு உருட்டுக்கட்டை தாக்குதல் சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது

உத்திரமேரூர் அருகே சொத்து தகராறில் விவசாயி உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-16 22:16 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லி என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 56). விவசாயி. இவரது சகோதரர்கள் திருமுகம் (54), சசி என்கிற சசிகுமார் (46). டில்லிக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் டில்லிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தை அவரது சகோதரர்கள் திருமுகம், சசி என்கிற சசிகுமார், திருமுகத்தின் மகன் முருகேசன் (25) ஆகியோர் தீ வைத்து எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டில்லி, பெருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டில்லி தன்னுடைய உறவினர் காசி (62), செல்லத்துரை (24) ஆகியோருடன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

3 பேர் கைது

அப்போது அவர்களை வழிமறித்த திருமுகம், சசிகுமார், முருகேசன் ஆகியோர் போலீசில் புகார் செய்வாயா? என்று கேட்டு உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும், காசியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து டில்லி, பெருநகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மாடசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருமுகம், சசிகுமார், முருகேசன் ஆகியோரை கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

இதில் சசிகுமார் மீது ஏற்கனவே மணல் கடத்தல் மற்றும் அடி-தடி வழக்குகள் உத்திரமேரூர் மற்றும் பெருநகர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்