சிவகங்கை சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து போன 900 பேர் பெயர் நீக்கம் கலெக்டர் தகவல்

சிவகங்கை சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து போன 900 பேரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Update: 2019-03-16 21:30 GMT
சிவகங்கை,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் பணிபுரியும் வாக்கு சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், தாசில்தார்கள் ரமேஷ், கண்ணன், சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது சட்டசபை தொகுதி வாரியாக வாக்குசாவடி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வாக்குசாவடி அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் பணி என்ன என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்த 900 இறந்தவர்களின் பெயர்கள் தற்போது நீக்கம் செய்யபட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், செய்தல் தொடர்பாக விண்ணப்பங்கள் கொடுத்தல் அவைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சிவகங்கை சட்டசபை தொகுதிகுட்பட்ட வாக்காளர்களில் 1800 பேர் மாற்றதிறனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலின் போது இவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். சிவகங்கை மன்னர் கல்லூரியில் இருந்து புதியதாக வாக்காளர் சேர்க்கைக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 120 பேர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, பாகம் மாறி இருந்தது. அவைகள் தற்போது சரிசெய்யப்பட்டு விட்டன.

வாக்குசாவடிகளில் மேற்கூரைகள் சரியாக உள்ளதா, குடிநீர், கழிப்பறை, வசதிகள் உள்ளனவா என்பதை பார்த்து தகவல் தெரிவிக்கும்படி வாக்குசாவடி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த 17 வாக்குசாவடிகளை அதே கட்டிடத்தில் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் 7 கி.மீட்டர் தொலைவிற்கு சென்று வாக்களித்து வருவதாகவும், தங்களுக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) தொகுதி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதியிலும் 1,856 வாக்குசாவடிகள் உள்ளன. இந்த தேர்தலுடன் சேர்த்து மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த முறை புதியதாக வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி இந்த எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்