ரூ.40 லட்சம் வாடகை பாக்கி: தனியார் கண் மருத்துவமனை பொருட்கள் ஜப்தி விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் ரூ.40 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் தனியார் கண் மருத்துவமனையில் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2019-03-16 21:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மந்தக்கரை பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ். இவருக்கு சொந்தமாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் 3 மாடி கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் வாசன் ஐ கேர் என்ற கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இதற்காக அந்த கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் மாதந்தோறும் வாடகை பணத்தை இடத்தின் உரிமையாளருக்கு செலுத்தி வந்தனர். ஆனால் கடந்த 15 மாதத்திற்குரிய வாடகை பணத்தை செலுத்தாமல் ரூ.40 லட்சம் பாக்கி வைத்தனர்.

இந்த வாடகை பணத்தை தரும்படி பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் இம்தியாஸ் கேட்டுள்ளார். இருப்பினும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இதையடுத்து இம்தியாஸ், வக்கீல் சுப்பிரமணியன் மூலமாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, வாடகை பணத்தை மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டும், இல்லையெனில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வாடகை பணத்தை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று கோர்ட்டு உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ராமலிங்கம் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிற்குரிய பொருட்களான கணினிகள், மேஜை, நாற்காலிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பொருட்களை அதே மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்