மும்பைக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி போதைப்பொருள் பறிமுதல் 2 பேர் கைது

மும்பைக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-16 23:43 GMT
மும்பை,

நாட்டின் நிதிநகரமான மும்பையை குறி வைத்து போதைப்பொருள் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. கஞ்சா, கோகைன், எம்.டி. போன்ற போதைப்பொருட்கள் இங்கு தாராளமாக கிடைக்கின்றன. வெளிநாடுகளில் இருந்தும் மும்பைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன.

மிகவும் விலை உயர்ந்த போதைப்பொருட்கள் இங்கு எளிதாக கிடைக்கின்றன. செல்வந்தர்கள், இளம் வயதினர் மற்றும் மாணவர்களை குறி வைத்தே இந்த போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எந்த விலை கொடுத்தும் போதைப்பொருட்களை வாங்கி விடுகிறார்கள்.

இதன் காரணமாகவே மும்பை பெருநகரத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மும்பை போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மும்பைக்கு தானே மாவட்டம் பயந்தர் வழியாக அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுதவதாக தானே ஊரக போலீசுக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்குள்ள சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் நள்ளிரவு வரையிலும் போலீசார் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

ஆனால் போலீசார் தொடர்ந்து வாகனங்களை சோதனை போட்டனர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆட்டோ வருவதை போலீசார் கவனித்தனர். போலீசார் அந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அந்த ஆட்டோவில் 2 பேர் பைகளுடன் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த பைகளை வாங்கி சோதனை போட்டனர்.

இந்த சோதனையில் அந்த பைகளில் ‘எபட்ரின்' என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வந்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மும்பை காந்திவிலியை சேர்ந்த யோகேஷ் ரமன்லால் ஷா(வயது50), சாதேவ் வைஜ்நாத் ஜமாதார்(38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.3 கோடி என்பது தெரியவந்தது.

கைதான இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பதை கண்டறிய போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்