ஊடக சான்றளிப்பு குழுவிடம் அனுமதிபெற்றே விளம்பரம் வெளியிட வேண்டும் கலெக்டர் அருண் தகவல்

ஊடக சான்றளிப்பு குழுவினரிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-16 23:59 GMT
புதுச்சேரி,

புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி அரசியல் தன்மையுள்ள விளம்பரத்திற்கு சான்றளித்தல் தொடர்பாக விரிவான உத்தரவுகள் வழங்கி உள்ளது. அரசியல் தன்மை வாய்ந்த விளம்பரங்களை தொலைக்காட்சி, கேபிள் கட்டமைப்புகள், எப்.எம்., திரையரங்குகள் மற்றும் இ-பேப்பர் மூலம் விளம்பரம் செய்வதற்கு முன்னர் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே ஒளி, ஒலிபரப்பு செய்யவேண்டும்.

விளம்பரங்கள் முன் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம், புதுச்சேரி பேட்டையன்சத்திரம் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் புதுவை மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வெளியிடும் விளம்பரங்களுக்குரிய விண்ணப்பங்கள் ஒளி, ஒலி பரப்ப தொடங்குகின்ற நாளுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஏனைய பிற நபர் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்கும்போது விளம்பரம் ஒளி, ஒலி பரப்ப உள்ள நாளுக்கு 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும். விண்ணப்பத்துடன் வெளியிட கருதப்பட்டுள்ள விளம்பரத்தின் இரு மின்னணு படிவ நகல்கள் மற்றும் அதனுடைய எழுத்துப்படிவம் சான்றளிக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

சான்றளிப்பதற்கான விண்ணப்பத்தில் எத்தனை முறை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை வெளியிட ஆகும் கட்டணம், விளம்பரத்தின் தயாரிப்பு செலவு மற்றும் ஒளி, ஒலி பரப்புக்கான செலவு, மேலும் அரசியல் தன்மையுள்ள விளம்பரங்கள், பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தும் ஒலி, ஒளி காட்சிகளுக்கும், ஊடக சான்றளிப்பு குழுவின் முன் அனுமதிபெற வேண்டும்.

செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன் அனுமதிபெற தேவையில்லை. எனினும் அச்செய்திதாளுக்கான மின்னணு பதிவில் அரசியல் விளம்பரங்கள் இடம்பெறுமாயின் அவ்விளம்பரங்களுக்கும் மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றி முன் அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்