பள்ளி ஆண்டு விழாவில் தள்ளுமுள்ளு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பள்ளி ஆண்டு விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-03-17 22:45 GMT

ஆரணி, 

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்து கொள்ள வந்த இளைஞர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆரணி தாலுகா போலீசில் 8 பேர் மீது புகார் செய்யப்பட்டது. ஆனால் குமார் என்பவரை மட்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரணி – ஆற்காடு சாலை இரும்பேடு கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விசாரணைக்கு அழைத்து சென்ற குமாரை விடுவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்