பாலம் கட்டுவதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மொபட்டுடன் தவறி விழுந்தவர் சாவு

பாலம் கட்டுவதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-03-17 23:00 GMT
கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், கண்ணாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளாந்துரை(வயது 54). மால்வாய் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு கடந்த 14-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு தனது மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் கல்லக்குடி அருகே தாப்பாய் கிராமத்தில் சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அங்கு எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதை அறியாத வெள்ளாந்துரை மொபட்டுடன் அந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அதிகாலை நேரம் என்பதால் அவர் பள்ளத்தில் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.

இதனால், ரத்தவெள்ளத்தில் உயிருக்காக பள்ளத்துக்குள் போராடிக்கொண்டு இருந்தார். காலை 7.30 மணி அளவில் தான் அந்தவழியாக வந்தவர்கள் பள்ளத்தில் கிடந்த வெள்ளாந்துரையை பார்த்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்