கொடைக்கானலில் பரபரப்பு, 4 கார்களின் கண்ணாடி உடைப்பு - மளிகை கடையில் பொருட்கள் திருட்டு

கொடைக்கானல் நகரில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 4 கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் அப்பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பொருட்களையும் திருடி சென்றனர்.

Update: 2019-03-17 22:45 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் முகமது அலி ஜின்னா (வயது 38), விஜயகுமார் (41), அப்பாஸ் (40) முகமது அலி (45). நேற்று முன்தினம் இவர்கள், தங்களது வீடுகளின் முன்பு கார்களை நிறுத்தி விட்டு தூங்கினர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது கார்களின் கண்ணாடிகள் உடைக் கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்.குணசேகரன், தனிக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அதேபகுதியை சேர்ந்த யூசுப் என்பவரின் மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பலசரக்கு பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்களின் கண்ணாடிகளை உடைத்ததும், கடையின் பூட்டை உடைத்து திருடியதும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீசாரிடம் வலியுறுத்தினர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்