குளித்தலை அருகே வாகன சோதனை: தம்பதியிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

குளித்தலை அருகே நடந்த வாகன சோதனையில் தம்பதியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-03-17 23:00 GMT
குளித்தலை,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்