ராயம்பேட்டையில் 3 பெருமாள் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம்

ராயம்பேட்டையில் 3 பெருமாள் கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-03-17 22:30 GMT
திருவையாறு,

திருவையாறு அருகே கண்டியூரில் உள்ள அரசாபவிமோசன பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் நேற்று கருட சேவை நிகழ்ச்சி ராயம் பேட்டையில் நடந்தது. நிகழ்ச்சியில் அரசாப விமோசன பெருமாள், திங்களூர் வரதராஜ பெருமாள், ராயம்பேட்டை வரதராஜ பெருமாள் ஆகிய 3 பெருமாள்களும் ஒரு சேர கருட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

விழாவில் வருகிற 20-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம், 21-ந் தேதி தேரோட்டம், 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 29-ந் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சாமி வீதி உலா நடக்கிறது.

30-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி பழனிவேல், தக்கார் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்