பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தபடவில்லை என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Update: 2019-03-18 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தேர்தல் தேதி அறிவித்த 72 மணி நேரத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அதனை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டுவிட்டது. மேலும் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களின் மீதும் சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவக பதாகைகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் துணியால் மூடப்பட்டிருந்தது. ஆனால் அது காற்றில் பறந்து விட்டதால், தற்போது ஜெயலலிதா படம் அந்த வழியாக செல்வோரின் பார்வையில் படும்படியாக தெரிகிறது. மேலும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள விளம்பர பதாகையில் உள்ள ஜெயலலிதா படம் மறைக்கப்படவில்லை. மேலும் அந்த அலுவலகத்தின் முன்பு உள்ள கல்வெட்டும் மறைக்கப்படவில்லை. வேட்பு மனுதாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் செய்திகள்