குன்னம் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையால் பரபரப்பு

குன்னம் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-03-18 22:15 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியிலுள்ள மக்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால், வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனையடுத்து அரசு உத்தரவின் பேரில், கடந்த 1989-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர்களிடம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட இடத்தை மீட்டு ஆதிதிராவிட இன மக்களுக்கு வீட்டு மனைகளாக பிரித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட நிலத்தை நில உரிமையாளர்களிடமிருந்து மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் புறக்கணிக்க போவதாக வயலப்பாடி பஸ் நிலையத்தில் விளம்பர பதாகை வைத்து உள்ளனர். மேலும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல வருகிற சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலும் புறக்கணிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்