கஜா புயலுக்கு தப்பிய சாலையோர மரங்கள் தீ வைத்து எரிப்பு

கஜா புயலில் தப்பிய சாலையோரங்களில் நின்ற மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-18 22:45 GMT
கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி கடுமையாக தாக்கிய கஜா புயலில் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்னை மற்றும் பலா, மா, தேக்கு, சவுக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்களும் அடியோடு சாய்ந்து விவசாயிகளை திணறடித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக நின்றிருந்த ஆலமரங்களும் அடியோடு சாய்ந்து கிடக்கிறது.

ஒரு சில இடங்களில் மட்டும் சாலை ஓரங்களில் மரங்கள் தப்பி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் நின்ற ஏராளமான வாகை மரங்களின் கிளைகள் முறிந்து சாய்ந்தது. ஆனாலும் அந்த பகுதியில் அடர்த்தியாக நின்ற பல புளிய மரங்கள் புயலையும் தாங்கி கம்பீரமாக நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஓய்வுக்காகவும் வெயிலுக்காகவும் ஒதுங்கி நின்று செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சாலையோரமாக மரங்கள் நிற்கும் பகுதியில், குப்பைகளையும், தென்னை மரக்கழிவுகளையும் கொட்டி இருந்தனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் அந்த கழிவுகளில் தீ வைத்து உயிரோடு நின்ற புளிய மரங்களையும் சேர்த்து எரித்துள்ளனர். இதனால் 10-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிழல் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கஜா புயலால் ஒட்டு மொத்த மரங்கள், விவசாயம் இழந்து நிற்கதியாக நிற்கிறோம். அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தான் உடனடியாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அப்போது தான் மழையை பெற முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் புளிச்சங்காட்டில் உயிரோடு நின்ற மரங்கள் தீ வைத்து எரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்