கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-18 22:15 GMT
கடலூர், 

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெற்று வந்த மக்கள் குறைகேட்புக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனினும் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு வெளியே மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் கலெக்டர் அன்புசெல்வனிடம் மனுகொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவரை கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடியை சேர்ந்த வினோத்(வயது 24) என்பது தெரியவந்தது. இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சிக்கு பணம் செலுத்தி கடந்த மாதம் 19-ந்தேதி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வேலை பார்க்காமல் உடனேயே திரும்பி வந்து விட்டார்.

இதனால் அந்த ஏஜென்சியை அணுகி, விமான டிக்கெட் கட்டணத்தை கழித்து விட்டு மீதி உள்ள பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். தனியார் ஏஜென்சியினர் அவருக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காததால் விருத்தாசலம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் தனது பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்