நெய்வேலியில் காவலாளியிடம் வழிப்பறி செய்தவர் கைது

நெய்வேலியில் காவலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-18 22:00 GMT
நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள சின்னகாப்பான்குளத்தை சேர்ந்தவர் எழில்நிலவன் (வயது 34). இவர் கொள்ளிருப்பில் என்.எல்.சி. அமைத்துள்ள சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயார் செய்யும் நிலையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று காலை 28-வது வட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை எதிரே வந்த போது, அவரை ஒருவர் கத்தியை காட்டி வழிமறித்தார். தொடர்ந்து அந்த நபர், எழில்நிலவன் சட்டைபையில் இருந்த ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து எழில்நிலவன் தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். அதில் எழில்நிலவனிடம் பணம் பறித்து சென்றது, 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் வீரமணி(39) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் அனல்மின்நிலையம் 1 எதிரே உள்ள தபால் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வீரமணியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தி மற்றும் ரூ. 500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்