திருமருகல் ஒன்றியத்தில் எலி தொல்லையால் 13 ஆயிரம் எக்டேர் உளுந்து, பயறு சேதம் விவசாயிகள் கவலை

திருமருகல் ஒன்றியத்தில் எலி தொல்லையால் 13 ஆயிரம் எக்டேரில் உளுந்து, பயறு சேதம் அடைந்துள்ளது. இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-03-18 22:30 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 13 ஆயிரம் எக்டேரில் உளுந்து, பயறு சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். சம்பா சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் குறைந்த அளவு மகசூல் கிடைத்தது. இதை தொடர்ந்து உளுந்து மற்றும் பயறு சாகுபடி பணியை திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருமருகல் ஒன்றிய பகுதியில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் பயறு செடிகளில் உள்ள காய்களை எலிகள் கடித்தும். தின்றும் வருவதால் செடிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய உளுந்து, பயறுகள் எலிகளின் தொல்லையால் ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை கடன் வாங்கி மேற்கொண்டு வந்தோம். தற்போது எலி தொல்லையால் மகசூல் குறைந்துள்ளது. இதனால் செலவு செய்ததை விட மிக குறைந்தளவே மகசூல் கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்