ஏரி கொள்ளளவை அதிகரிக்க செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை

செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் கிடைக்கும் மணலையும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-18 23:45 GMT
சென்னை,

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. போதிய மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்ததுடன், விவசாயமும் வறட்சியை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

தற்போது 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் 16 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 47 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

எனவே இந்த 2 ஏரிகளும் விரைவில் வறண்டு விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே குடிதண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கடந்த 1945-ம் ஆண்டு முதல் தற்போது வரை பார்த்தால் பூண்டி ஏரி 1949, 1952, 1969, 1974, 1983, 1987, 1989, 1990, 1991, 2000 ஆகிய ஆண்டுகளில் மே மாதம் முதல் தேதியில் முற்றிலுமாக வறண்டுவிட்டது. ஆனால் புழல் ஏரியை பொறுத்தவரையில் 1945 முதல் தற்போது வரை வறண்டு போகவே இல்லை. சோழவரம் ஏரியில் கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பார்த்தால் 1969, 1975, 1983, 1990, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே வறண்டு விட்டது. ஆனால் இந்த காலகட்டங்களில் ஓரளவு ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது.

அதேபோல் தற்போது ஏரிகள் வறண்டுவிட்டால் அவற்றை அடுத்த மழைக்கு முன்பாக கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனை ஏற்று பொதுப்பணித்துறை குடிநீர் ஆதார பிரிவினர் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் தூர்வார திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையின் நீர் ஆதாரமான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளை அதிகரிப்பதுடன், முறையாக தூர்வாரவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதுவும் ஏரியும் தூர்வாரப்பட வேண்டும், அரசுக்கும் வருமானம் வர வேண்டும் என்ற அடிப்படையில் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போன்று திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஏரி மணல் தேவைப்படுபவர்கள் கலெக்டர் அலுவலகங்களில் அதற்கான பணத்தை செலுத்திவிட்டு ஏரிகளில் தூர்வாரி வைக்கப்படும் மணலை எடுத்து செல்லலாம். அதேநேரம் ஏரியும் தூர்வாரப்படும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது இறுதி வடிவம் பெறப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு ஏரிக்கும் அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. குறிப்பாக சோழவரம் ஏரியும் தூர்வாரப்பட வேண்டும், மணல் விற்பனை மூலம் வருமானமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.45 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. பூண்டி ஏரி தூர்வாருவதற்கு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவை பெற்று ஏரி தூர்வாரும் பணி தொடங்கப்படும்.

இதன்மூலம் பருவ கால மழை மூலம் கூடுதலாக 10 சதவீதம் நீரை தேக்கி வைக்க முடியும். மேலும் ஏரி இருக்கும் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவும் உயர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் 9,986 நீர்நிலைகளில் இருந்து 44 லட்சத்து 10 ஆயிரத்து 472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச்செல்லப்பட்டு உள்ளது. இதன் மூலம் 86,355 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை மாநகரில் உள்ள வடபழனி முருகன் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், குயப்பேட்டை முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் உள்ள தெப்பக்குளங்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்வற்றி வறண்டுவிட்டது.

இதேபோல் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்களில் உள்ள தெப்பக்குளங்களில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதில் ஒரு சில தெப்பக்குளங்கள் தூர்வாரிய நிலையில் உள்ளன. பெரும்பாலான கோவில் தெப்பக்குளங்கள் தூர்வாராமல் கிடக்கிறது. அவற்றையும் முறையாக தூர்வார வேண்டும் என்றும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்