கபிஸ்தலம் அருகே தகராறில் காயம் அடைந்தவர் சாவு கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

கபிஸ்தலம் அருகே தகராறில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தை-மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Update: 2019-03-18 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 45). இவருடைய எதிர் வீட்டை சேர்ந்தவர் சண்முகம் (52). வயலில் ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனிசாமி-சண்முகம் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 10-ந் தேதி தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த சண்முகம், பழனிசாமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சண்முகம் தரப்பினருக்கும், பழனிசாமி தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

காயம் அடைந்தவர் சாவு

இதில் பழனிசாமியின் மகன் லட்சுமணன்(28) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் உள்பட 6 பேரும் கடந்த 12-ந் தேதி வீடு திரும்பினர். கோஷ்டி மோதலில் லட்சுமணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு கடந்த 17-ந் தேதி திடீரென தலைவலி ஏற்பட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்த அவரை உறவினர்கள் உடனடியாக கும்பகோணம் அரசு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலை வழக்கு

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன் ஆகியோர் சண்முகம், அவருடைய மகன் சுரேஷ் (32), தளபதி (40) ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

தகராறில் காயம் அடைந்தவர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்