மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை(புதன்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார்.

Update: 2019-03-18 23:43 GMT

பெங்களூரு, 

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்–மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18–ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.

அதன்படி சுமலதா, மண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.

தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

என்னிம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

வருகிற 20–ந் தேதி (நாளை) மண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.

நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.

அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத்துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்‌ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்–மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

இவ்வாறு சுமலதா கூறினார்.

இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்‌ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்