கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் சாவு பண்ணாரி கோவிலுக்கு வந்தபோது சோகம்

பண்ணாரி கோவிலுக்கு வந்துவிட்டு கொடிவேரி சென்ற வாலிபர் ஒருவர் அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-19 22:30 GMT

டி.என்.பாளையம்,

கோவை சூலூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பண்ணாரி அம்மன் கோவிலில் கடந்த 2 வாரமாக குண்டம் விழா நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்வதற்காக மாரிமுத்து, தங்கை சித்ரகலா (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் ஒரு சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரிக்கு வந்தார்.

அம்மனை தரிசனம் செய்த பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் அனைவரும் கொடிவேரி அணைக்கு செல்ல விரும்பினார்கள். அதன்படி அங்கு சென்றதும் சித்ரகலாவை தவிர மற்றவர்கள் அணையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் திடீரென குளித்துக்கொண்டு இருந்த மாரிமுத்துவை காணவில்லை. இதை அறிந்த சித்ரகலாவும், உடன் வந்தவர்களும் பதறி துடித்தார்கள். இதுபற்றி உடனே சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொடிவேரி அணை தண்ணீரில் மாரிமுத்துவை தேடினார்கள். 30 நிமிடம் கழித்து அவரின் உடலைத்தான் மீட்க முடிந்தது. நீச்சல் தெரியாத மாரிமுத்து அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தி போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

தங்கை சித்ரகலாவும், உடன் வந்தவர்களும் மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்