மனைவியை எரித்து கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நாட்டறம்பள்ளி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்து கொன்ற டிரைவருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2019-03-19 22:45 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பங்களாமேடு அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32), டிரைவர். இவருக்கும் திருப்பத்தூர் தாலுகா அரசம்பட்டி மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் பிரியாவிற்கும் (23) கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பெங்களூருவில் பணிபுரிந்து வந்த சுரேஷ், மனைவி பிரியாவை தன்னுடன் பெங்களூருக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் பெங்களூரு செல்ல மறுத்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

பெங்களூருக்கு வரும்படி பலமுறை அழைத்தும் வராமல், பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததால், அவருக்கு பிறருடன் தொடர்பு இருக்கலாம் என்று சுரேசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சுரேஷ் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு, பிரியாவின் பெற்றோர் அவர்களுடைய உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். வீட்டில் பிரியா மட்டும் தனியாக இருந்தார். அப்போது பிரியாவை பெங்களூருக்கு வரும்படி சுரேஷ் மீண்டும் அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரம் அடைந்த அவர், பிறருடன் தொடர்பு இருப்பதால் பெங்களூருக்கு வர மறுப்பதாக கூறி பிரியாவை கட்டையால் சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை பிரியா உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிரியாவின் தாயார் முருகம்மாள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காகப்பதிந்து சுரேஷை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா ஆஜராகி வாதாடினார். நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செல்வம், மனைவியை எரித்து கொன்ற சுரேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சுரேஷை போலீசார் பலத்த காவலுடன் வேனில் அழைத்து சென்று வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்