தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற பணத்தையும் அவர்கள் விட்டுவைக்காமல் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-19 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலமுருகன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ஏட்டு முருகராஜ், போலீஸ்காரர்கள் தினகரன், சரவணன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கிச்சென்ற அரசு பஸ்சை வழிமறித்து அதில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது ஒரு வாலிபர் வைத்திருந்த ஜவுளிக்கடை பையில் கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்த்தபோது ரூ.44 லட்சம் இருந்தது. உடனே அந்த வாலிபரை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தலைவாசல் அருகே உள்ள நாசுக்குறிச்சி பகுதியை சேர்ந்த அழகுவேல் (வயது 34) என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், தான் இந்த பணத்தை சென்னையில் இருந்து சேலம் தலைவாசல் பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதையடுத்து ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்தை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோர் பார்வையிட்டனர்.தொடர்ந்து, அழகுவேலிடம், தலைவாசல் பகுதியில் யாரிடம் இந்த பணத்தை ஒப்படைக்க உள்ளாய் என்று கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்காமல், பாரீஸ் நாட்டில் இருந்து ஒருவர் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமோ அல்லது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் கட்சியினர் மூலமாக இந்த பணத்தை எடுத்து வந்தாரா? என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் கோட்டாட்சியர் குமாரவேல் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த பணம் எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டிவனம் அருகே புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் இந்திரா நகர் என்கிற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்த போது, அதில் ஒருவர் விழுப்புரம் கே.கே. நகர் பிரகாஷ்(வயது 27), புதுச்சேரி ஆதிங்கப்பட்டு குளத்து கோவில் தெரு பாலமுருகன்(25), டிரைவர் கணேசன்(34) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் அந்த பணத்தை எதற்காக எடுத்து செல்கிறீர்கள் என்று அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவர்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து சென்று திண்டிவனம், மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் கேட்ட போது, அவர்களிடம் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் எண்ணிப்பார்த்தனர். அதில் மொத்தம் ரூ.55 லட்சத்து 34 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அந்த பணம் சப்- கலெக்டர் மெர்சி ரம்யா மூலம் கருவூலத்தில் ஒப்படைக் கப்பட்டது.

நேற்று காலையில் திண்டிவனம் பகுதியில் 2 இடங்களில் மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து இருந்தனர். இதை தொடர்ந்து மாலையில் விழுப்புரம், திண்டிவனத்தில் மீண்டும் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்