திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-03-20 22:45 GMT
திருமருகல்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருமருகல் ஒன்றியத்தில் 93 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சியின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, விளம்பர தட்டிகள் அப்புறப்படுத்துதல், அரசியல் கொடிகள் அகற்றுதல், கல்வெட்டுகளில் உள்ள அரசியல் வாசகங்களை மறைத்து வைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து திருமருகல் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குச்சாவடி மையங்களை திருமருகல் ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பள்ளிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததை உடனே அகற்றும் படி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதா? எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சுகுமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் தமிழ்ச்செல்வன், சுகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்