தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-20 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர் துர்காதத் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுதேர்தலுக்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் மற்றும் ஊடக கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண் காணித்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் 6 பறக்கும் படைக்குழுக்கள், 6 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், 2 வீடியோ பார்வைக்குழுக்கள், 2 கணக்குக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை ரூ.16 லட்சத்து 55 ஆயிரத்து 654 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை இயக்குனர் (வருமான வரித்துறை) கண்ணன், சிதம்பரம் கோட்டாட்சியர் விசுமகாஜன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன், ஜோதி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்