காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை சகோதரர்கள் 3 பேர் கைது

அரிமளம் அருகே காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-20 23:00 GMT
அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 65). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பூசையா (47) என்பவருக்கும் இடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 17-ந்தேதி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த பூசையாவின் சகோதரர்கள் சக்திவேல் (37), ஆறுமுகம் (35), உறவினர்கள் யுவராஜ் (22), சித்ரா (40), வசந்தா (55), உஷா (30) ஆகியோர் சேர்ந்து காந்தி, அவருடைய மகன் ராமையா ஆகியோருடன் தகராறு செய்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த த.மா.கா. மாநில முன்னாள் இளைஞரணி செயலாளர் அன்பில்முத்து (39) இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய சென்றுள்ளனர். அப்போது பூசையா தரப்பினர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நீ பேசுகிறாய் என கூறி அன்பில்முத்துவை கழுத்து, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டினர். இதில் காந்தி, ராமையா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அக் கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்பில்முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அன்பில்முத்து நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காந்தி மனைவி முத்து கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், அரிமளம் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் பூசையா, சக்திவேல், ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அன்பில் முத்து உயிரிழந்தையொட்டி இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்பில்முத்து த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததால் தனது மாநில த.மா.கா. இளைஞரணி பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்