‘‘குடிகாரர்களின் உயிரை காப்பாற்றவே மதுவிலக்கை அமல்படுத்தவில்லை’’ அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி விளக்கம்

குடிகாரர்களின் உயிரை காப்பாற்றவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றும், படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2019-03-20 23:30 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நடைபெறக்கூடிய மிகப்பெரிய தேர்தல் இது. அவரின் சமாதியில் வணங்கி விட்டுத்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறோம்.

வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்தது எங்களின் பெருந்தன்மை. தினகரன் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் என்று சொன்னது அவர் பேசவில்லை. அவரது மனசாட்சி பேசுகிறது. அவர் அறியாமலேயே பேசிய வார்த்தைகள். அதற்கு பின்னர் அவர் பேசியது புற சாட்சி.

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏன் கூறப்படவில்லை? என கேட்கின்றனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை அகற்றிவிட்டால் குடிகாரர்கள் கை, கால் நடுங்கி, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

குடிகாரர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்–அமைச்சருக்கு உண்டு. அமைச்சரான எனக்கும் அந்த கடமை உண்டு.

எனவே படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு, பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவின் லட்சியம். அந்த லட்சியத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்