மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.30 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.30 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-21 22:45 GMT
மீஞ்சூர்,

சென்னையை அடுத்த மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான 40 டன் செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். செம்மரக்கட்டைகள் இருந்த கன்டெய்னருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த கன்டெய்னரின் ‘சீலை’ உடைத்த மர்மநபர்கள் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான செம் மரக்கட்டைகளை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சேமிப்பு கிடங்கு மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரியில் இருந்த செம்மரக்கட்டைகளை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் செம்மரக்கட்டைகளை திருடியதாக திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 24), பூபாலன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி கவுண்டர்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குவியல் குவியலாகவும், பிளாஸ்டிக் கவர்களிலும் செம்மரக்கட்டைகள் பார்சல் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் அந்த குடோனில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது? என்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்