வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

பெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-21 23:00 GMT
பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோட்டில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிச்செல்வன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அல்போன்ஸ் (வயது 47) என்பது தெரியவந்தது. அவர் உரிய ஆவணங்களின்றி வைத் திருந்த ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் அரியலூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் கவுல்பாளையம் வழியாக வந்த வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சின்னதுரை, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த யூஜின் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.58 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். அல்போன்ஸ், யூஜின் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படை யினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக 2 பேரிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்