கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2019-03-21 23:00 GMT
கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 6 துணை வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,037 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று நபர்கள் நியமிக்கப்படுவார்கள். 1,400-க்குமேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அதனடிப்படையில் மொத்தம் உள்ள 1,037 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரிய 5,028 அலுவலர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதற்கான நிகழ்வு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் கணினிமுறையில் குலுக்கலை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனடிப்படையில் 5,028 அலுவலர்களுக்கும் இன்று முதல் அவர்கள் எந்த வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான ஆணை வழங்கப்படவுள்ளது. வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்றத்தொகுதிக்குபட்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களின் மூலம் முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக்மேல்நிலை பள்ளியிலும், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. 

மேலும் செய்திகள்