தேர்தல் பணிகள், பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் சிவஞானம் தகவல்

பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

Update: 2019-03-21 22:30 GMT
விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 21 பறக்கும் படை, 21 நிலையான கண்காணிப்புகுழு, 7 வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் 7 வீடியோ வியூவிங் குழு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில், ஒரு துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர், ஒரு உதவி சார்பு ஆய்வாளர், 2 காவலர்கள், 1 வீடியோ கிராப்பர் என 5 நபர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள 21 பறக்கும் படை வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ கண்காணிப்பு குழுவில் ஒரு துணை வட்டாட்சியர் அதற்கு மேற்பட்ட நிலையிலான அலுவலர், ஒரு வீடியோ கிராப்பர் என 2 நபர்கள் அரசியல் பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றினை கண்காணிப்பார்கள். வீடியோ வியூவிங் குழுவில் 3 முதுநிலை உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்துகொண்டு, அரசியல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் போது வீடியோ கண்காணிப்புக் குழு மூலமாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி செலவினங்களை மதிப்பீடு செய்வார்கள்.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 1950 எனும் வாக்காளர் தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், புகார்களையும் இதில் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்தவருக்கு அறிவிக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் சி-விஜில் என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து செயலியில் பதிவேற்றலாம்.

இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பெறப்பட்டு, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அனுப்பியவரின் செல்போன் எண்ணுக்கு புகார் மீதான நடவடிக்கை குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்