வண்டலூர் பூங்காவில் உலக வனநாள் கொண்டாட்டம்

வண்டலூர் பூங்காவில் உலக வனநாள் கொண்டாடப்பட்டது.

Update: 2019-03-22 21:45 GMT
வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவானது இந்தியாவிலுள்ள வனஉயிரின பாதுகாப்பு கல்வி மையங்களில் சிறந்ததொரு மையமாக திகழ்கிறது. இதன் மூலம் பூங்காவின் முதன்மை நோக்கங்களின் ஒன்றான வன உயிரின கல்வி புகட்டலை பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் கற்பிக்கும் பள்ளியை வடிவமைத்து போதித்து வருகிறது.

வண்டலூர் பூங்கா பள்ளியில் ஒரு நிகழ்வாக உலக வன நாளையொட்டி மாணவ- மாணவிகள் பங்கேற்கும் வகையில் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு தாவர இனங்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் விலங்கினங்கள் குறித்த செய்தியை சொல்லும் வகையில் கிண்டி தேசிய பூங்கா மற்றும் “கேர் எர்த்” அமைப்புடன் இணைந்து பல்வேறு குழு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்து பங்கு பெறும் மாணவர்களுக்கு வனஉயிரினங்கள் குறித்த வினாடி வினா போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வனம் மற்றும் கல்வி எனும் பொருள் உலக அளவில் கொண்டாடப்படும் உலக வன நாளையொட்டி தமிழ்நாடு வனத்துறை மாநில அளவிலான நிகழ்ச்சியாக கிண்டி சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வனம் மற்றும் அதன் பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து தொழில்நுட்ப அறிவு புகட்டப்பட்டது.

மேலும் அனைத்து தரப்பினரும் வனஉயிரினம் குறித்த செய்தியை அறிந்துகொள்ள ஏதுவாக “அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பள்ளி You Tube எனும் தொலைக்காட்சி நிகழ்வும் முதன்முறையாக தொடங்கி வைத்துள்ளது.

இந்த நிகழ்விலேயே பூங்காவில், பூங்கா தூதுவர்களுக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்ட Book Of Vandalur Zoo எனும் நூலும் வெளியிடப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்