வாகனங்களில் செல்பவர்கள் சிகரெட்டுகளை அணைக்காமல் வனப்பகுதியில் வீச வேண்டாம் வனத்துறையினர் வேண்டுகோள்

வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் பீடி மற்றும் சிகரெட்டுகளை அணைக்காமல் வனப் பகுதிக்குள் வீசவேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-03-22 22:00 GMT
உடுமலை,

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் கோடந்தூர், தளிஞ்சி, குளிப்பட்டி, குருமலை உள்ளிட்ட 18 செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. இந்த செட்டில்மென்ட் பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வனப்பகுதியில் விளையும் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும், தங்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்வதற்கும் மலைப்பகுதியில் இருந்து, வனப்பகுதியில் உள்ள சிறு பாதைகள் வழியாக நடந்து கீழே வந்து செல்கின்றனர். அத்துடன் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர், மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் புற்கள் காய்ந்த நிலையில் உள்ளன. அதனால் அந்த புற்களில் எளிதில் தீப் பிடித்து பரவக்கூடிய நிலை உள்ளது. அதனால் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் கோடந்தூர், குருமலை, குளிப்பட்டி உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர்.

அப்போது வனப்பகுதி பாதையில் நடந்து செல்லும் போது பீடி, சிகரெட்டுகளை அணைக்காமல் வனப்பகுதிக்குள் வீச வேண்டாம் என்று மலைவாழ் மக்களை கேட்டுக்கொண்டனர். அத்துடன் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் சோதனை சாவடிபகுதிகளில் வனத்துறையினர், வாகனத்தில் வரும் பொதுமக்களிடம், வனப்பகுதி சாலை ஓரங்களில் புற்கள் காய்ந்த நிலையில் உள்ளதால் பீடி, சிகரெட்டுகளை புகைத்து விட்டு அணைக்காமல் வனப்பகுதிக்குள் வீச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பணிகளை திருப்பூர் மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப் ஆலோசனைப்படி, உடுமலை வனச்சரக அலுவலர் சி.தனபாலன் மற்றும் வனத்துறையினர் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்