திருப்பூர் அருகே காரில் சென்ற செங்கல் விற்பனை புரோக்கரிடம் ரூ.72ஆயிரம் பறிமுதல் நிலை கண்காணிப்புக்குழு நடவடிக்கை

திருப்பூர் அருகே காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.72 ஆயிரத்தை கொண்டு சென்ற செங்கல் விற்பனை புரோக்கரிடம் இருந்து நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-03-22 22:30 GMT
பெருமாநல்லூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்பவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற் காக பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூரில் குன்னத்தூர் ரோட்டில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் முத்துக்குமார் தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.72 ஆயிரத்து 500 இருந்தது.

இதைத்தொடர்ந்து காரில் வந்த ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் டி.என்.பாளையத்தை சேர்ந்த குருசாமியிடம்(வயது 52) விசாரணை நடத்தினார்கள். செங்கல் விற்பனை புரோக்கரான அவரிடம் ரூ.72 ஆயிரத்து 500-க்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதனால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணத்தை உதவி கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்.டி.ஓ. செண்பகவல்லியிடமும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்