மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-22 21:41 GMT
மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ராஜவீதி, ராமலிங்கம் தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் போதுமான அளவு காவிரி குடிநீர் கிடைப்பதில்லை. மேலும், ஆழ்குழாய் கிணறுகளும் பயன்பாடு இன்றி இருப்பதுடன், அங்கிருந்த பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியும் தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்காக அவர்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருச்சி சாலையில் காந்தி சிலை அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். நகரின் பிரதான சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வரும் வரை நாங்கள் இருக்கிறோம். அதுவரை மறியலை கைவிட்டு ஓரமாக வாருங்கள் என்று போலீசார் கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு ஓரமாக வந்து நின்றனர். இதைத்தொடர்ந்து நகராட்சி பொறியாளர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, குடிக்க கூட தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் இன்றி எப்படி இருக்க முடியும். ஆகவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 நாட்களில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்