மனைவி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு: மதுரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் கொலை

மதுரையில் பட்டப்பகலில் வாலிபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பியவரை 4 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது. மனைவி குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த பயங்கர சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2019-03-22 23:30 GMT
மதுரை,

மதுரை முத்துப்பட்டி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 24). பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு சதீஷ்குமார், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு அவர்கள் தாராபுரத்தில் வசித்து வந்தனர்.

அப்போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே கடந்த ஆண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு அனிதா வந்து விட்டார். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்கிடையில் சதீஷ்குமார், காதல் மனைவி அனிதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். அவர்கள் அடிக்கடி போன் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். நேற்று முன்தினம் சதீஷ்குமார் கோவில்பட்டிக்கு சென்று அனிதாவை தன்னுடன் மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். இதையறிந்த அவரது பெற்றோர் மகளை தேடி மதுரைக்கு வந்தனர். மேலும் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சதீஷ்குமாரின் பெற்றோரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை குறித்து சதீஷ்குமார், தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரிக்க இருவீட்டினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறினர். அதன்படி நேற்று மதியம் சதீஷ்குமாரும், அனிதாவின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு விசாரணை முடிந்து சதீஷ்குமார் மட்டும் தனியாக போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தெற்குமாரட் வீதியில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சதீஷ்குமாரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் சுற்றி வளைத்து அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்தும் திடீர்நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து திலகர்திடல் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதில் அனிதாவின் அண்ணன் செந்தில்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்