மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.1 கோடி, 1,026 சேலைகள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.1¾ கோடி, 1,026 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-03-23 00:41 GMT
சேலம்,

சேலம் ஜங்சன் ரெயில்வே பகுதியில் நிலை கண்காணிப்பு அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி 17 அட்டை பெட்டிகளில் 678 சேலைகள் வனவாசி பகுதிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இந்த சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாரதா ருக்குமணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் அடங்கிய அட்டை பெட்டிக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் லாவண்யா என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓமலூர் அருகே தாரமங்கத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் ஓமலூர் பறக்கும் படை அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேனில் இருந்து மற்றொரு வேனுக்கு பணம் மாற்றி கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.

அந்த வேனில் ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்புவதற்கான பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் விசாரணையில், வேனில் மாற்றிக்கொண்டு இருந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை எனவும், வாகனத்தின் பதிவு எண் மாறியிருப்பதும், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு காவலரும் உடன் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்லப்பிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த வேனில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.88 லட்சமும், ராசிபுரம் நாராயணன் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில் ரூ.80 லட்சத்து 50 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த பணம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சரவணன், தாசில்தார் குமரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் சேலம் வருமான வரித்து துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அந்த பணம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.களுக்கு நிரப்ப எடுத்து வந்தது தெரியவந்து. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வேம்படிதாளத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பறக்கும் படை அதிகாரி சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுவாதி டெக்ஸ் உரிமையாளர் தனசேகரன் (52) வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த அழகுவேல் (32) என்பவர் மினிவேனில் வேம்படிதாளம் அருகே கொண்டு வந்து கொண்டு இருந்தார். அதில் சிகரெட் விற்பனையில் வசூல் செய்த பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சத்து94 ஆயிரத்து 240 வைத்திருந்தார். இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆத்தூர் தாண்டவராயபுரம் அருகே உள்ள பாரதிபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வாழப்பாடி அருகே உள்ள மண்ணை நாயக்கன் பட்டியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மோட்டார்சைக்கிளில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 440 பறிமுதல் செய்யப்பட்டது.

தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை வியாபாரி விஸ்வநாதன் மினி ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

எடப்பாடி அருகே மொரம்புகாடு, கொங்கணாபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொங்கணாபுரம் பகுதியில் ஆம்னி காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 348 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் ரஞ்சித்குமார் என்பவர் வந்தார். அவர் ரூ.98 ஆயிரம் வைத்திருந்தார். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து மேட்டூர் உதவி கலெக்டர் லலிதாவிடம் ஒப்படைத்தனர். நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 86 லட்சத்து 95 ஆயிரத்து 680 மற்றும் 1,026 சேலைகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்